ஞாயிறு, 16 அக்டோபர், 2011
மூலம் மற்றும் பூராடம் நட்சதிரதிர்க்கான விருட்சங்கள்
தனித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன.
மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், கோங்கிலம் (இலவம்) மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் செலவழிப்பதால், நல்ல பலன் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது.
தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம்.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை.
இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது.
இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம்.
'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’
'’ஸ்ரீபிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள்.
''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்'' என்கிறார் சுவாமிநாத சிவம் குருக்கள்.
--------------------------------------------------------------------------------
தைரியம், நேர்மை, கண்ணியம், பயணத்தில் ஆர்வம், வாசனைப் பிரியர்கள், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள். தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.
பூராட நட்சத்திரத்துக்கு உகந்தது, பவழ மல்லிகை மரம்; அதன் நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. பூராட தோஷம் உள்ளவர்கள், மல்லிகை மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால், அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும்.
நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலை நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், பவழ மல்லிகை. தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது.
காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் ஆதலால், ஸ்ரீகாளிபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயர் அமைந்ததாம்.
நாற்புறமும் கோபுரங்களுடன் பிரமாண்ட மாகத் திகழ்கிறது ஆலயம் முதல் தளத்தில் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபெரியநாயகராக சிவனார் எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே இங்கே குரு மூர்த்தம்.
ஊழிக்காலத்தில், பிரணவத்தைத் தோணி யாகக் கொண்டு உலகை வலம் வரும்போது, பிரளயத்தில் அழியாத இந்தத் தலத்தை மூலாதார க்ஷேத்திரம் எனச் சொல்லி அருளி னாராம் சிவனார்.
இரண்டாவது தளத்தில், மலையுச்சியில் காட்சி தருகிறார் ஸ்ரீசட்டைநாதர். திருஞான சம்பந்தருக்கு அம்பிகை திருமுலைப்பால் தந்தருளிய அற்புதமான இந்தத் தலத்தின் விருட்சம், பவழ மல்லிகை மரம். பாரிஜாத மரம் என்றும் சொல்வார்கள்.
இதன் மூன்று இலைகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அமர்ந்திருப்பதாக ஐதீகம். பாரிஜாதகா என்னும் இளவரசி ஒருத்தி, கதிரவன் மீது காதல் கொண்டாளாம். ஆனால், அவளை ஏற்கவில்லை கதிரவன். இதில் விரக்தியுற்றவள், தன்னைத்தானே எரித்துக்கொண்டு இறந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து உருவானதுதான் பவழ மல்லிச் செடி என்றொரு கதை உண்டு. பகலில் சூரியனுக்கு முன்னே உதிர்ந்து, இரவில் செழித்து மணக்கும் குணம் கொண்டது பவழ மல்லிகை. இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தரையில் விழுந்து கிடக்கும் பூக்களை நாம் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இதில் பவழ மல்லிகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
பவழ மல்லிகையைக் கஷாயமாக்கி குடித்தால் நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் விரைவில் குணமாகும். இதன் இலைச் சாறு, வயிற்றுக் கோளாறுக்கு வடிகாலாகும். பித்தக் காய்ச்சல், தொடை நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் வேர், பல் ஈறில் உள்ள வலியை நீக்கவல்லது. இதன் தளிர் இலைகள், மூல நோயிலிருந்து நிவாரணம் தருகின்றன. பவழ மல்லிகைப் பூக்களோ இருமலை குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் சொறி, சிரங்கு, நமைச்சலைக் குணமாக்குகின்றன.
'சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்கிற குறிஞ்சிப் பாட்டில், 'சேடல்’ என்பது 'பவழக்கால் மல்லிகை’ என விளக்கவுரை தந்துள்ளார் நச்சினார்க்கினியர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணம்- திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சம்!
- விருட்சம் வளரும்...
படங்கள்: கே.குணசீலன்
'ஞானம் கிடைக்கும் தலம்!’
''இங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் வெங்கட்ராம சிவாச்சார்யர். மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது'' என்கிறார் அவர்.
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!
தர்ம சிந்தை, பக்தி, சகல கலைகளையும் அறியும் ஆர்வம், அமைதி, பிறருக்கு மனதாலும் தீங்கு நினைக்காத இயல்பு ஆகியன உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!
சனிக்கிழமை, டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கு உரிய நட்சத்திரம், உத்திராடம். மேற்கண்ட காலங்களில், அதிக அளவில் வெளிப்படும் உத்திராடத்தின் கதிர் வீச்சுக்களை, வாகை மரம் தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்ளும். உத்திராட நட்சத்திரம், வாகை மரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களை சுத்தம் செய்து ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கிறது வாகை. இந்த மரத்தைத் தினமும் தொட்டாலும், இதன் நிழலில் இளைப்பாறினாலும் கெட்ட கதிர் வீச்சுக்கள் நீங்கிவிடும்.
வாகை (வைகை) மரம், திருவாழ்கொளிபுத்தூர் ஸ்ரீவண்டமர் பூங்குழல் நாயகி (ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்) சமேத மாணிக்கவண்ணர் (ஸ்ரீரத்னபுரீஸ்வரர்) சுவாமி ஆலயத்தின் தல விருட்சம். நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, திருப்புன்னத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலம், திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
அருகில் உள்ள இலுப்பைப்பட்டு தலத்துக்கு பாண்டவர்கள் வந்தனர். அவர்களில் அர்ஜுனன் மட்டும் மேற்கில் இருந்த வாகை மரக் காட்டில், ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தான். அவனுக்குக் கடும் தாகம். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வர, ''சுவாமி, தாகமாக இருக்கிறது. இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று கேட்டான். முனிவர், தன் கையிலிருந்த தண்டத்தினால் நீர் நிலை (தண்ட தீர்த்தம்) உண்டாக்கி, தண்ணீர் வழங்கியருளினார். உடனே அர்ஜுனன், தன்னுடைய உடைவாளை முனிவரிடம் கொடுத்து விட்டு, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்தான். பின்னர் திரும்பிப் பார்த்தால், முனிவரைக் காணோம். முனிவரின் காலடிச் சுவட்டைத் தொடர்ந்து, தேடி அலைந்தான். முனிவராக வந்தது இறைவனே. அவர், ஒரு வாகை மரத்தடியில் புற்றில் இருந்த வாசுகி பாம்பிடம் உடைவாளை கொடுத்துவிட்டு, ஆலயத்தை அடைந்தார். பிறகு, இது இறை விளையாட்டு என உணர்ந்த அர்ஜுனனும் இறைவனை தொழுதான். அவனிடம் உடைவாளைத் தருமாறு வாசுகிப் பாம்பை பணித்தார் இறைவன். இதனால், இந்தத் தலம், 'திருவாள் அளி புற்றூர்’ என வழங்கலாயிற்று. பிறகு, திருவாழ் கொளிபுத்தூர் என்றாகி, தற்போது திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
கடும் பஞ்சத்தில் உலகம் தவித்தபோது, தானியங்கள், ரத்தினங்கள், மழை ஆகியவற்றைத் தந்தருளியதால் இங்கேயுள்ள இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தவள், வதம் முடிந்ததும், சாந்தம் கொண்ட தலம் இதுவாம்! ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசனி பகவான் (இங்கு நவக்கிரகங்கள் இல்லை), வாசுகி பாம்பு ஆகியோர் அருளும் தலம் இது. இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான 'வாகை’ போற்றி வணங்கப்படுகிறது.
வாகையின் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டினால், கண் நோய்கள் குணமாகும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிட் டால், மாலைக்கண் நோய் சரியாகும். இதன் பூக்களை அரைத்து, பாம்புக்கடி விஷ முறிவுக்குப் பயன்படுத்துவர். தவிர, கட்டிகள், வீக்கங் களைக் குணமாக்கவும் வல்லது இது. வாகை மரப்பட்டை ரத்தமூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து கசியும் பிசின், பெண்களின் வெள்ளைப்படுதல் முதலான நோய்களைக் குணப்படுத்துகிறது. உஷ்ண உடல் உள்ளவர்கள், வாகை மரத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளில் பசும் நெய் கலந்து சாப்பிட, உடற்சூடு தணியும். குறிஞ்சிப் பாட்டில், 'வடவனம் வாகை வான்பூங்குடசம்’ என வாகையைக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை 'வாகை சூடியவர்கள்’ எனப் போற்றுகிறார் நச்சினார்க்கினியர்.
அடுத்தது, திருவோண நட்சத்திரத்துக்கான ஆலயம்...
பில்லி சூனியம் அகலும்!
''சாந்த சொரூபினியாக ஸ்ரீதுர்கை அருளாட்சி செய்யும் தலம் இது. ராகு காலத்தில் இவளை வணங்கினால், நவக்கிரக தோஷம் அகலும்; பில்லி சூனியம் விலகும்; கொடிய ரோகங்கள் நிவர்த்தியாகும்; பிள்ளை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து இறைவன் சந்நிதிக்கு முன்னே திருமணம் முடிப்பது விசேஷம். அவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளுவார் ஈசன் என்பது ஐதீகம்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் நாகராஜ குருக்கள்.
--------------------------------------------------------------------------------
கல்வியாளர்கள், இசை விரும்பிகள், அறிஞர்கள், நறுமணப் பிரியர்கள், ஆடை- அணிகலன்கள் மீது விருப்பமுள்ளோர், தூய்மையாக இருக்க விழைவோர்... திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி மற்றும் சனிக்கிரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களை திருவோண நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தத் தினங்களில் மேற்படி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவு இருக்குமாம். சரக்கொன்றை மரம் அவற்றைத் தனக்குள் சேமித்துக்கொண்டு, கெட்ட கதிர்வீச்சுக்களை நன்மை தரும் நல்ல கதிர் வீச்சுக்களாக மாற்றி விடுகிறது.
பந்தநல்லூர் ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதீஸ் வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- சரக்கொன்றை.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். கண்வ முனிவரும் தேவர்களும் வேண்டியபடி, இந்தக் கோயிலில் ஸ்ரீபரிமளவல்லித் தாயாருடன் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளும் தனிச் சந்நிதியில் அருள்கிறார். சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் ஸ்ரீபசுபதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் குடிகொண்டிருக்கிறார் சிவனார். புற்றின் மீது பசுவின் காலடி பட்ட சுவடும், அம்பிகை ஆடிய பந்தின் சுவடும் இன்றைக்கும் உள்ளன. அம்பாள்- ஸ்ரீவேணுபுஜாம்பிகை. அதாவது, மூங்கில் போன்ற தோள் அழகு கொண்டவள் என்று அர்த்தம்.
அம்பிகைக்கு, பந்து ஆடுதலில் விருப்பம் வந்து, சிவனாரை வேண்டினாள். அவளுக்கு நான்கு வேதங்களையும் பந்தாகத் தந்தருளினாராம் சிவபெரு மான். திருக்கயிலையில், தோழியருடன் பந்தாடினாள் பராசக்தி. அப்போது தன்னையே மறந்தாள். சூரியனும் அஸ்த மனம் ஆகாமல், நெடு நேரத்துக்கு ஒளி கொடுத்தான். விளையாட்டு வளர்ந் தது; பகலும் நீண்டது. இதில் உலகம் சோர்வுற்றது. விளையாட்டில் ஆழ்ந்த உமையவள் மீது கடும் கோபம் கொண்டார் சிவனார். அவள் ஆடிய பந்தினை எட்டி உதைக்க... அது பூமியில் வந்து விழுந்தது. பிறகு, தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் அம்பிகை. அடுத்து ஈசனின் ஆணைப்படி பசுவாக மாறி, சரக் கொன்றை மர நிழலில், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து வழிபட்டாள்; அந்தத் தலம் 'திருப்பந்தணைநல்லூர்’ என்றாகி, பிறகு 'பந்தநல்லூர்’ ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்கு, திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி தருவது கொள்ளை அழகு! இங்கே, இறைவனின் திருமணத்தைக் கண்டு வழிபட்ட ஆனந் தக் களிப்புடன் நேர் வரிசையில் நிற்கிறார்கள் நவக்கிரகங்கள். இவர்களை வழிபட, கோள்களால் ஏற்படும் துயரம் அழியும் என்பது ஐதீகம்! வருடத்தில், ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியக் கதிர் படும் அற்புதம் நிகழ்கிறது!
வாய்ப்புண், தொண்டைப் புற்று ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி, சரக் கொன்றை மரத்துக்கு உள்ளது. இதன் இலைக் கொழுந்தை அரைத்துச் சாறாக்கி, சர்க்கரை கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைத் துவையல் செய்தும், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர்தாமரைக்குப் பூசலாம். கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலை யைத் தேய்க்கலாம். மூளைக் காய்ச்சலுக்கும் உகந்தது இது! சரக்கொன்றைப் பூவுக்கு புழுக்களைக் கொல்லும் திறன் உண்டு. பூவை தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி ஆகியவை குணமாகும். பூவை பாலுடன் காய்ச்சி உட்கொண்டால், உடல் உறுப்புகள் வலுப்பெறும். சரக்கொன்றையால் தயாரிக்கப்படும் மருந்து, தடைப்பட்ட மாத விலக்கை வெளியேற்றும்.
கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே!
வியாபாரம் சிறக்கும்!
''இது, பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும்கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'' என்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் ராஜசேகர குருக்கள் ''ஸ்ரீமுனீஸ்வரருக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி சூனியம் அகற்றும் சக்தி வாய்ந்தவர் முனீஸ்வரர்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் குருக்கள்.
அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரம், மூன்று தாரங்களை (தாரைகளை) உள்ளடக்கியது; குதிரை வடிவம். ராசி புருஷனின் சிரசில் இடம் பிடித்த நட்சத்திரம். எண்ணிக்கையில் முதலாவது நட்சத்திரமும் இதுவே! இதன் தேவதை, அஸ்வினி தேவர்கள். தேவலோக மருத்துவர்கள்; தேவர்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பவர்கள்.
வேள்வியின் சிரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவ இரட்டையர்களான அஸ்வினி தேவர்களுக்குக் கட்டளையிட்டான், இந்திரன். அவர்கள், உடலையும் தலையையும் ஒட்டவைத்தனர். வேள்வி உயிர் பெற்றது. அந்த வேள்வியின் மூலமாக, தேவர்களுக்கு உணவு தடங்கலின்றி வந்து சேர்ந்தது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (யஞ்யஸ்யசிரோச்சித்யத...).
தேவர்களின் அருளுடன் இணைந்தது அஸ்வினி நட்சத்திரம். நம் உடலில், கைகளில் வலிமை, அவர்கள் அருளில் வலுப்பெறும் என்கிறது வேதம் (அச்வினோர் பாஹீப்யாம்). நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 27 நட்சத்திரங்களையும் நான்கு பாதங்களாகப் பிரிக்கும் போது, 108 நட்சத்திர பாதங்களாக விரிவடையும். 12 ராசியிலும் அது பரவியிருப்பதால், அதன் தாக்கம் ராசிகளுக்கு ஊக்கம் அளிக்கும். 1 0 8=9 கிரகங்களும் நட்சத்திர பாதங்களுடன் இணைந்து, பலனை இறுதி செய்யும். 108-ல் ராசிச் சக்கரம் முழுமை பெற்றதால் 108 தடவை அர்ச்சனையை முழுமை பெற்றதாக ஏற்கிறோம்.
அஸ்வினியில், முதல் பாதத்தில் செவ்வாய் இணைந்திருப்பான். இரண்டில் சுக்கிரனும் மூன்றில் புதனும் நான்கில் சந்திரனும் இருப்பார்கள். நட்சத்திர பாதங்கள் நவாம்சத்தை உருவாக்கி, பலன் சொல்லுவதில் மாறுதலைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்துடன் இணைந்த கிரகங்கள், பாதத்துக்குப் பாதம் மாறுபட்ட பலனைச் சுட்டிக்காட்டுவதால், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும், அவர்களின் இயல்பில் மாறுபாட்டுக்குக் காரண மாகிறது. அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன், அம்சகத்தில் மேஷத்தில் வருவதால், அம்சகத்திலும் ராசியிலும் சந்திரன் மேஷத்தில் இருப்பதால், அவனுக்கு வர்கோத்தமம் எனும் தகுதி உண்டு. (சுபம் வர்கோத்தமேஜன்ம). அதை ஏற்படுத்தியது நட்சத்திர பாதம்.
ராசியிலும் அம்சகத்திலும் செவ்வாயுடன் இணைந்திருக்கும் பெருமை பெற்றதால், அவனுடைய பிறப்பின் தகுதி சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. மற்ற கிரகங்களுடன் ராசியும் சேர்ந்து, நட்சத்திர பாதம் இணைந்திருந்தாலும் வர்கோத்தமத்தின் பங்கு வலுப்பெற்றிருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் நட்சத்திரத்தின் பங்குக்கு முக்கியத்துவம் இருப்பதைத் தெரிவிக்கிறது ஜோதிடம்.
லேசான, அதாவது கனம் குறைந்த நட்சத்திரங்களில் அஸ்வினியும் ஒன்று. 64 கலைகள், குறிப்பாக பொதுக்கல்வி, கிரய - விக்ரயம் (பல்பொருள் அங்காடி), பொருளாதாரத்தை வலுவாக்குதல், கைவேலைப்பாடுகள், மருந்து வகைகள், பயணம் ஆகியவற்றுக்கு அஸ்வினி நட்சத்திரத்தின் இணைப்பு, வெற்றிக்கு வழி வகுக்கும் என்கிறார் வராஹமிஹிரர் (லகுஹஸ்தாச்வின...).
முற்பிறவியின் கர்மவினையே, உடலெடுக்கக் காரணமாகிறது. வருகின்ற இன்ப - துன்பங்களுக்குத் தக்கபடி, ஒருவரின் தோற்றம் இருக்கும். பிறக்கும் வேளையில் உள்ள நட்சத்திர பாதத்தின் இணைப்பு, வரக்கூடிய இன்ப - துன்பங்களுக்கு ஆதாரமாகிவிடும்! அழகிய தோற்றம், ஆடை-அணிகலன்களில் ஆர்வம், அன்புடன் பழகுகிற பண்பு, காரியத்தில் நேர்த்தி, தெளிவான சிந்தனை ஆகியவை அஸ்வினி நட்சத் திரத்தில் தோன்றியவரின் இயல்பு! அவர்கள், சிந்தனை வளத்துடனும் சுகாதாரத்துடனும் இருப்பார்கள். மருத்துவ ஆர்வம், கொடை வழங்கும் இயல்பு, பொருளாதாரம், வேலைக்கு ஆட்கள், மனைவி என அனைவரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்த படி செயல்படும் திறமைசாலிகள் என்கிறார் பராசரர் (விஞ்ஞானவானரோகி).
முதல் பாதத்தில் பிறந்தால், பிறர் பொருள் மீது ஆசைப்படுவர். இரண்டாவதில் பிறந்தால், உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்வர். மூன்றாவதில், எல்லோருக்கும் பிரியமாக இருப்பர். நான்காவதில், நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என 4 பாதங்களுக்கும் தனித்தனி பலனைச் சொல்லியுள்ளார் வராஹமிஹிரர். பாதத்துக்குப் பலன் சொல்லும் விஷயத்தில், அதில் இணைந்த குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கத்தால், இயல்பு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆகவே, பாத பலன்... நம்பிக்கைக்கு உகந்தது!
அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன் மேஷ ராசி. மேஷத்துக்கு அதிபதி, செவ்வாய். முதல் பாதத் திலும் செவ்வாய் தனிப்பட்ட முறையில் இணைந்திருப்பான். அவனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் (5) சிம்மம். அதில் முதல் நட்சத்திரம், மகம். முதல் பாதத்தில் செவ்வாயின் தொடர்பு உண்டு. அவனுடைய அதிர்ஷ்டம், 9-வது (தனுர்) ராசி; அதில் முதல் நட்சத்திரம் மூலம். அதன் முதல் பாதத்துக்கு செவ்வாயின் தொடர்பு உண்டு. பிறந்த நட்சத்திர பாதம், ஒருவரின் பூர்வ புண்ணியத்தைத் தெரிவிக்கும் நட்சத்திர பாதம், அதன் செழிப்பை வரையறுக்கும் அதிர்ஷ்டம் (கண்ணுக்குப் புலப்படாத பூர்வ புண்ணியம்), அதைச் சுட்டிக்காட்டும் நட்சத்திர பாதம் ஆகியவை செவ்வாயுடன் இணைந்திருப்பதால், ஆசைக்குக் கட்டுண்டு, எதையும் ஆராயாமல், சடுதியில் செயல்பட்டு, பிறர் பொருளைக் கவருவதிலும் ஒருவித துணிச்சல் ஏற்பட்டுவிடும். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்றில், 1,5,9 ஆகிய பாவங்கள் தென்படுவதால், நூல் பிடித்தது போல் தொடர்பு இருப்பதால், இந்த மூன்றுக்கும் ரஜ்ஜு என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்! இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாதங்கள், மாறுபட்ட கிரகங்களுடன் இணைந்திருப்பதால், ஒரே நட்சத் திரமானாலும் பாதத்துக்கு மாறுபட்ட பலனை அளிக்க கிரகங்களின் பங்கு உதவுகிறது. இந்த மூன்று நட்சத்திரங் களுக்கும் கேது தசை ஆரம்பம் என்கிறது ஜோதிடம்.
பலன் சொல்லும்போது (குஜவத்கேது:), அதாவது செவ்வாய்க்கு உகந்த பலனை ஏற்கச் சொல்கிறது ஜோதிடம். மூன்று நட்சத்திரங் களிலும் முதல் பாதத்தில் செவ்வாயின் இணைப்பு, பலனை செவ்வாயுடன் இணைத்துச் சொல்லவும் பரிந்துரைக்கிறது.
பிறப்பின் வேளையுடன் (லக்னம்) முதல் பாதம், மிகவும் நெருங்கி இருப்பதால், தசாகாலத்தை நிர்ணயிப்பதில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளித்தது ஜோதிடம். கிரகங்களின் உயிரோட்டத்துக்கு நட்சத்திர பாதங்களின் இணைப்பு அவசியம். பலனை இறுதி செய்ய நட்சத்திர பாதத்தை எதிர்பார்க்கும் கிரகங்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி என அத்தனை கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் இணைந்திருக்கும். ராசி, ஹோரா, த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய பிரிவுகளில் அத்தனை கிரகங்களுடைய இணைப்பும் கிடைத்துவிடும். ஒட்டுமொத்தமான கிரகங்களையும் தன்னில் அடக்கிக் கொண்டு, அதன் தரத்துக்கு உகந்த முறையில், தன் பங்கையும் சேர்த்துப் பலன் அளிக்கும் பொறுப்பு, நட்சத்திரத்துக்கு உண்டு.
பூர்வ ஜன்ம கர்மவினையின் வடிகாலாக நட்சத்திரங்கள் செயல்படுகின்றன. 12 ராசி களிலும் பரவலாக எல்லா கிரகங்களும் இணைந்திருந்தாலும் கர்மவினையின் பலனை வரிசைப்படுத்த நட்சத்திரத்தின் துணையை நாடுகின்றன எனும் தகவல், நட்சத்திரங்களின் சிறப்புக்குச் சான்று.
பிறப்பெடுத்த ஒருவர், பல பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்ப - துன்பத்தை ஏற்கிறார். தசா புக்தி அந்தரங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனாலும் எது முந்தி, எது பிந்தி என்கிற அட்டவணையை நட்சத்திரங்களே வரையறுக்கின்றன. வாழ்வின் துவக்கத்தில், சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் ஏற்பட தசைகளின் அட்டவணை காரணமாகிறது. அந்த அட்டவணைக்குக் காரணம், நட்சத்திரம். எனவே, கர்மவினையை வெளியிடும் கருவியாகச் செயல்படுகின்றன நட்சத்திரங்கள்!
மிருதுவான (லேசான) அஸ்வினியின் இணைப்பு எல்லா சுபகாரியங்களுக்கும் சிறப்பைச் சேர்க்கும். முகூர்த்தங்கள் அல்லாத அலுவல்களுக்கும் அது வலுவூட்டும். ராசி புருஷனின் தலை மேஷ ராசி. அதில் இணைந் திருப்பது அஸ்வினி. சிந்தனையுடன் செயல்படும் திறமையை அளிக்கும் அது, விபரீதமான கிரகங்களுடைய சேர்க்கை வலுப்பெற்றிருக்கும் போது, சிந்தனை மங்கிச் செயல்பட முடியா மல் செய்யவும் வாய்ப்பு உண்டு! தவிர, பூர்வ ஜன்ம வினையை அளப்பது 5-ஆம் இடம்; அதன் அளவை வரையறுப்பது 9-ஆம் இடம்! இவற்றின் விபரீதமான போக்கு, நட்சத்திரத்தின் தனிப்பலனை முடக்கிவிடும். நட்சத்திரங்களோ கிரகங்களோ, தனியாகவோ ஒன்று சேர்ந்தோ தன்னிச்சையாக பலன் அளிக் காது. கர்மவினையின் பலனை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான் அதன் வேலை. ஆகவே அவற்றுக்கு சுதந்திரம் இல்லை! உச்சம், நீசம், மூல த்ரிகோணம், வர்கோத்தமம், ஸ்வக்ஷேத்திரம், அஸ்தமனம், மௌட்யம், வக்ரம் போன்ற கிரகங்களின் நிலைகள், கர்மவினையின் தரத்துக்கு உகந்த பலன் அளிப்பதை வரையறுக்கின்றன. பிறக்கும் வேளையில் அமைந்த கிரகங்களின் தரத்துக் குக் காரணம், ஒருவரது கர்மவினை. இதன் வெளிப்பாட்டுக்குத் தக்கபடியே கிரகங்கள் செயல்படும். நட்சத்திரங்களும் அவ்விதமே செயல்படும்! ஆகவே, நட்சத்திரங்களை வழிபட்டு, கர்மவினையை செயல்படாமல் தடுக்க முற்பட்டு, துன்பத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
பூஜை, தியானம், வழிபாடு போன்றவை தவறான கர்மவினையை (பாபத்தை) கரைத்து விடும். நட்சத்திரங்களும் கிரகங்களும் இல்லாத (கரைந்த), கர்மவினையை நடைமுறைப்படுத்தாது. போதிய எண்ணெய் விட்டு, திரியைப் போட்டு, விளக்கேற்றுகிறோம். திரியின் நுனியில் இருக்கும் ஒளி, திரியை அழிக்காமல், திரி வழியே எண்ணெயின் தொடர்பில், எரிந்து கொண்டிருக்கும். அதில் இருக்கும் எண்ணெயை முழுமையாகத் துடைத்தெடுத்துவிட்டால், திரியை எரித்து, தானும் எரிந்துவிடும். அதேபோல, சேமித்த விபரீத கர்மவினையை, பரிகாரங்களால் அழித்துவிட்டால், திறமையான கிரகங்களும் செயலிழந்துவிடும். ஆகவே, மனதின் செயல்பாட்டைத் திருப்பிவிட்டு, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வைக்கும் தருணத்தில், தப்பான கர்மவினை கரையாமல் இருந்தாலும், சிந்தனையில் நுழைய அவகாசமின்றிப் போய்விடும். அப்போது, துயரம் தொடாமல் இருந்துவிடும்.
அஸ்வினி நட்சத்திரத்துக்கு தொடர்பு உடைய அஸ்வினி தேவர்களை வழிபட வேண்டும். 'அம் அச்வினீ குமாராயநம:’ என்று சொல்லி வழிபடலாம். அல்லது 'அச்விப்யாம் நம:’ என்று சொல்லி வணங்கி வழிபடலாம்.
காலையில் எழுந்ததும் அவனுடைய நாமத்தை மனதில் நிறுத்தி வேண்டிக் கொண்டு, அன்றைய கடமையில் இறங்குங்கள். அஸ்வினி தேவர்கள், உங்களுக்கு சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)